search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரமில்லாத உணவு"

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தரமில்லாத உணவு பொருட்களை விற்ற வணிக நிறுவனத்திற்கு ரூ.7¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சவுமியாசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பொதுமக்கள் எந்த ஒரு வணிக நிறுவனத்திற்கு சென்றாலும் உணவுப்பொருட்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப்பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை இருக்கிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது கேட்டு வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய உணவுப்பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அந்த பொருளை உடனடியாக மாற்றி வாங்கி தரப்படும் குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் பி.ஐ.எஸ். உள்ளிட்ட எண்கள் இல்லை என்றால் அது போலியானது.

    கடந்த 6 மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உணவு வணிக நிறுவனங்களிலும் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வகத்தில் இருந்து வரப்பெற்ற முடிவினை தொடர்ந்து தரமில்லாத 30 உணவு பொருட்களை விற்பனை செய்த உணவு வணிக நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் வழக்கு தொடரப்பட்டது. அவரின் துரித விசாரணையின் முடிவில் அபராத தொகையாக அந்த நிறுவனத்திற்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் கலப்படம் பற்றிய புகார்களை 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்கலாம். சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்-அப் எண்ணை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    ×